உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நெடுந்தீவு கடல் போக்குவரத்து விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் – டக்ளஸ் அவசர கோரிக்கை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்துச் சேவையைச் சீராக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நெடுந்தீவு மக்களுக்கான கடல் போக்குவரத்துச் சேவையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தாமதிக்கப்படுவது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் எனக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமுள்ளன.

இப்பிரச்சினை இன்று மட்டுமல்ல, கடந்த எமது ஆட்சிக் காலத்திலும் இருந்ததுதான்.

ஆனால், அன்று இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டபோது, நாம் உடனடியாக ஏதோவொரு மாற்று வழியில் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

தற்போது நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பிரதான படகுகளான ‘குமுதினி’, ‘வடதாரகை’ மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய மூன்றுமே பழுதடைந்து, திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் மாற்று வழியின்றி மக்கள் பெரும் அல்லல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்துச் சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது.

எமது ஆட்சிக் காலத்தில், இப்போக்குவரத்துப் பொறுப்பை வீதி அபிவிருத்தி அதிகார சபையே ஏற்க வேண்டும் என நாம் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து வலியுறுத்தியிருந்தோம்.

அதற்கமைய, அவர்களும் அதனை ஏற்று இன்றுவரை இலவச போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தனர்.

எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆழ்க்கடல் பரப்பில் சேவையில் ஈடுபடக்கூடிய ஆற்றலுள்ள படகொன்றை தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்தி, மக்களுக்கான கடல் போக்குவரத்துச் சேவையைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான ‘தேவா ரதம்’ என்ற படகும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.

எனவே, கொழும்பிலுள்ள தேசிய கூட்டுறவுச் சபையுடன் பேசி, குறித்த படகைத் திருத்துவதற்கான கடனுதவியைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி வழிவகை செய்ய வேண்டும்.

அத்துடன், இக்கடனுதவியை நெடுந்தீவுக்கு மட்டுமன்றி, தீவகப் பகுதியிலுள்ள அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேசிய கூட்டுறவுச் சபையின் ஊடாக ஓர் இலகு கடனாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் மக்கள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றங்களை எதிர்கொண்டுள்ளதால், தீவகக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இலகு கடன் கிடைப்பதன் மூலம் மக்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் மலிவு விலையில் இலகுவாகக் கொண்டு சேர்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

66 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

62 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0