அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கை
நலிவடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இலங்கை நாணயச் சந்தையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு கட்டமைப்பு ரீதியான பிரச்சினையாகும்.
நிதிச் சந்தைகள் என்பவை அரசியல் ரீதியான வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில் இயங்குவதில்லை.
அவை முழுமையாக ‘நம்பிக்கை’ என்ற ஒன்றின் மீதே இயங்குகின்றன.
சந்தை மீதான நம்பிக்கை உடைந்தால், சந்தையே முற்றாக வீழ்ந்துவிடும்.
‘நாட்டை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டோம்’ என்ற அரசின் தற்போதைய அரசியல் அறிக்கைகள் முதலீட்டாளர்களின் நலிவடைந்த நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பப் போதுமானதாக இல்லை.
நாணய மாற்றுச் சந்தையை நிலைப்படுத்த வெறும் அரசியல் செய்திகளை விட, வெளிப்படையான பொருளாதார சமிக்ஞைகளே சந்தைக்குத் தேவைப்படுகின்றன.
தற்போது இலங்கை வங்கி டொலரின் விற்பனை விலை 354 ரூபா வரை அதிகரித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
இது நாணயச் சந்தையின் மீதான அழுத்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
இதன் காரணமாக சந்தையில் ஓர் அபாயகரமான நச்சுச் சுழற்சி ஏற்பட்டுள்ளது.
டொலரின் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களைச் சந்தைக்குக் கொண்டு வராமல் முடக்கி வைத்துள்ளனர்.
மறுபுறம், டொலரின் விலை 375 ரூபாவைத் தாண்டிவிடும் என்ற அச்சத்தில் இறக்குமதியாளர்கள் முன்கூட்டியே டொலர்களைக் கொள்வனவு செய்ய முண்டியடிக்கின்றனர்.
இது சந்தையின் திரவத்தன்மையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
வெளிநாட்டு நாணயச் சந்தையை மீண்டும் சீர்செய்ய வேண்டுமாயின், அரசு எதிர்வரும் வாரத்தில் வட்டி வீதங்களை 50 முதல் 100 புள்ளிகள் வரை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படலாம்.
வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்தப் பொதுமக்களையே பாதிக்கும்.
அரசு உள்நாட்டில் பெறும் கடன்களுக்கான செலவு அதிகரிப்பதுடன், அதனை ஈடுகட்ட இறுதியாகப் பொதுமக்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.










