தமிழ்த் தேசிய கொள்கையுடன் செயற்படும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சி மாநாடு அமையும் என நம்புவதாக சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
1976ஆம் ஆண்டு தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு தொடர்பிலான மாவட்ட ரீதியான கலந்துரையாடலின் முதல் கலந்துரையாடல் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கலந்துரையாடல் ஆரம்பமானது.
வட்டுக்கோட்டை 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாட்டு குழுவின் ஏற்பாட்டில் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகள், அருட்பணி ஜெகதாஸ் அடிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, வவுணதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் உள்ளிட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி மற்றும் சங்க உறுப்பினர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 2026 மே மாதம் 30ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டை முன்னிட்டு, அதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் விதமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கலந்துரையாடல் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள்,
நாங்கள் அனைவரும் ஒரே இலக்குக்காக இணைந்து செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலையிலே இந்த மே 30ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாநாடானது வட்டுக்கோட்டை 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு. தமிழர் தாயகத்திலே இருக்கின்ற தமிழ்த் தேசியத்திற்காக தங்களை உண்மையிலேயே அர்ப்பணித்திருக்கின்ற உண்மையான செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கே ஒருங்கிணைத்து அந்த மாநாட்டிலே நடாத்தப்படுகின்ற உரைகள் ஊடாக மற்றும் ஏனைய மேடை அரங்க நிகழ்வுகள் ஊடாக தமிழ்த் தேசிய அறிவையும் இன்றைய தேவையையும் தமிழின உணர்வையும் ஊட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவும், அதனைத் தொடர்ந்து இந்த மாநாடு நிறைவடைந்ததும் இந்த மாநாட்டிலே ஒரு நூலையும் வெளியிட உத்தேசித்துள்ளோம்.
அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு இதனுடைய எழுச்சி நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் மற்றும் காலம் தீர்மானிக்குமாக இருந்தால் உலகளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்பட ஒரு சிந்தனைகள் இருக்கின்றன. 2026 மே 14இல் இருந்து 2027 மே 14 வரையான ஒரு வருட காலப்பகுதியை வட்டுக்கோட்டை பிரகடனத்தினுடைய 50வது ஆண்டு அந்த 50ஆவது நிறைவு ஆண்டு என்ற வகையிலே இந்த மாநாட்டைத் தொடர்ந்து மாவட்ட மட்டங்களில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடுகளை நடத்துவதும், மாவட்ட மட்டங்களை தொடர்ந்து அதற்குரிய சூழல் அமையுமாக இருந்தால் மக்கள் அதற்குரிய ஆதரவை பெருமளவிலே தருவார்களாக இருந்தால் பிரதேச மட்டங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் இவற்றின் ஊடாக வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டிக்க இருக்கின்றோம் என்ற ஒரு செய்தியையும் அந்த ஒரு வருடத்தினுடைய நிறைவிலே அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பேரெழுச்சி மாநாடு ஒன்றைக் கூட நடத்தலாம் என்ற எண்ணங்கள் எல்லாம் இருக்கின்றன.
ஆகவே நீங்கள் இன்றைய இந்த ஒரு கலந்துரையாடலுக்கு உங்களுடைய பொன்னான நேரத்தை அர்ப்பணித்து இங்கே வருகை தந்திருக்கின்ற சூழலிலே அதற்கு நாங்கள் மதிப்பளித்து இந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஏற்பாடுகளிலே எந்த ஒரு அமைப்போ எந்த ஒரு நபரோ முன்னிலைப்படுத்தப்படவில்லை. அனைவரும் சேர்ந்து இவற்றைச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பிலே இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய சமயத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என்று அனைவரும் ஒன்றிணைந்து கிராம மட்டங்களிலே இயங்குகின்ற அமைப்புக்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து இதிலே பங்கெடுத்துச் செயற்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு இந்த மாநாட்டுக்கு நீங்களும் நீங்கள் சார்ந்த அமைப்புக்களும் நிச்சயமாகப் பங்களிப்புச் செய்ய முடியும். அந்த நூல் உருவாக்கத்திலே எங்களுக்குப் பங்களிப்பு தேவைப்படுகிறது, நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதிலே பங்களிப்பு தேவைப்படுகிறது, எப்படியான நிகழ்வுகளை நாங்கள் அந்த மாநாட்டிலே மேடையேற்றலாம் என்பது தொடர்பாக, அது தவிர மாவட்ட மட்டங்களிலிருந்து இந்த மாநாட்டிலே பங்குபற்றுகின்ற பெயராளர்களை மாநாட்டிலே பங்குபெற வைக்கின்ற ஒரு தேவையும் இருக்கிறது. உள்ளக அரங்கு அதனுடைய கொள்ளளவு ஒரு வரையறைக்கு உட்பட்டது. ஆகவே அந்த வகையிலே நாங்கள் அந்த மாநாட்டிலே பங்குபற்ற இருக்கின்ற பெயராளர்களைக் கூட பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பதன் ஊடாக அதனை வெற்றிபெறச் செய்ய முடியும்.


















