கருணா மற்றும் பிள்ளையான் அணியின் முக்கிய நபரான இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியை இன்று (07) குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவராவார்.
கைது செய்யப்பட்டவர் கடந்த 2007, 2008, 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது அவர் பொத்துவில் – மட்டக்களப்பு வழித்தட பஸ் சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைக்காக அம்பாறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.










