யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் அனுசரணையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் சிறப்பு விருந்தினர்களாக செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், வடமாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் சமன் தர்மஸ்ரீ பத்திரன, யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ரம்யா சந்திரசேகரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ். மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், பொது மருத்துவ நிபுணர் த.பேரானந்தராஜா, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் படத் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் ஈடுபட்ட இந்துக் கல்லூரி ஒளிப்படக் கழக மாணவர்களுக்கு பிரதம விருந்தினர் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார். அத்துடன் இந்துக் கல்லூரி ஒளிப்படக் கழகத்துக்கான கேடயமும் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் பங்குபற்றிய சுகாதாரத்துறை பணியாளர்கள் ஏனைய விருந்தினர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த டெங்கு ஆவண குறும்படத்துக்காக முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் த.தவரூபன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.