வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஆலோசனையுடன், யாழ்ப்பாணம் முயற்சியாளர் சங்கத்தால் நடத்தப்படும் ‘பஞ்சவர்ணம்’ உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான புதிய விற்பனைக்கூடம் யாழ். நகரப் பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்துக்கு எதிரில் நேற்று திங்கட்கிழமை மதியம் திறந்து வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விற்பனைக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில்,
“உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை இருக்கின்றது. உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களைப் பொதுவான இடத்தில் காட்சிப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் வாய்ப்புக்களைக் கோரியிருந்தார்கள். தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த இடத்தில்தான் நான் மாவட்ட செயலராக இருந்தபோதும் விற்பனைக்கூடத்தை திறப்பதற்கு திட்டமிட்டிருந்தாலும் அது அப்போது சாத்தியப்பட்டிருக்கவில்லை. இப்போது சாத்தியமாகியுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான கட்டடத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க முடியும் என நம்புகின்றேன்.
எமது சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான விற்பனை நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபடும் அனைத்து முயற்சியாளர்களையும் வாழ்த்துகின்றேன். இதைச் சிறப்பாக இயக்குவதன் மூலமே உங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் ஏற்படும். சிறப்பாக இயங்க வாழ்த்துகின்றேன்.” – என்றார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்றுறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன், வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி செ.வனஜா, யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் ஆகியோரும், துறைசார் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் விற்பனைக்கூடம் காலை 9 மணியிலிருந்து பி.ப. 5 மணி வரையில் திறந்திருக்கும். உள்ளூர் உற்பத்தியாளர்களின் பனைசார் உற்பத்திகள், உள்ளூர் சிற்றுண்டிகள், ஆயுள்வேத மூலிகைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மிளகாய் தூள், சரக்குத் தூள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.