நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழ்ச் சைவப் பேரவையினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (24.05.2025) இடம்பெற்றது.
இதன்போது நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக, அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் தமிழ்ச் சைவப் பேரவையினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.
மேலும் மேற்படி உணவகம் பன்னாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கையின் சட்டம் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள் எனவும், அவர்கள் நல்லூரில் தமது நிறுவனத்தின் கிளையை எந்தவொரு அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது திறந்தமை திட்டமிட்ட நடவடிக்கை எனவும் தமிழ்ச் சைவப் பேரவையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், அனுமதியற்ற வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.