எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட எம்மை இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அகற்ற வேண்டாம் என யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று யாழில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் எவ்வாறு தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
பேருந்து நிலைய வளாகத்தில் எமது வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து நாம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர். இதேவேளை எம்மை நம்பியே எமது குடும்பம் இருக்கின்றது. 15 வருடமாக இதனை நம்பியே நாம் வாழ்கின்றோம். இ.போ.ச எங்களுக்கு தமது வளாகத்தில் செயற்பட அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு கடன்களைப் பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். எங்களுடைய பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள். அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும். இ.போ.ச சேவையினையும் இந்த இடத்தினை விட்டு அகற்ற கூடாது. அந்த சேவை இந்த பகுதியில் முன்னெடுப்பதன் மூலமே எமக்கு வருமானம் கிடைக்கிறது.
தற்பொழுது மாநகர சபை இ.போ.ச யாழ் சாலை முகாமையாளரூடாக 14 நாட்களுக்குள் எம்மை வெளியேறுமாறு கடிதம் வழங்கி உள்ளது.
கொரோனாவால் நாம் பாதிக்கபட்டோம். பாதிக்கப்பட்ட நாம் இப்பொழுது தான் மீண்டு வருகின்றோம். ஆகவே இதனை ஆளுநர் கருத்திற்கொண்டு தனது தீர்மானத்தை எமக்காக கரிசனை கொள்ள வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.