“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் மனோ எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்கத் தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்கப் போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படித்தான்.
இந்நாட்டில், 1971 இல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கிப் பின்னர், 1989 இலும் ஆயுதம் தூக்கி ஜே.வி.பி. போராட்டம் செய்தபோது, கைதாகி சிறையில் இருந்த ஜே.வி.பி. போராளிகளை, அன்றைய அரசு, “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால், ஜே.வி.பியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.
2015 – 2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படிச் சொன்னார்கள். ஆனால், அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களைக் கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களைப் புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம்.
தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜே.வி.பியே, இன்று இப்படிக் கூறுகின்றது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்குப் பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகின்றது. 1971 இல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜே.வி.பி., கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகின்றது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்குத்தான் வெளிச்சம்.” – என்றார்.