தமிழ் மக்கள் பல தசாப்த காலமாக வாக்களித்து ஏமாந்து போன பழைய முகங்களை தவிர்த்து இளம் புதிய முகங்கள் ஆறு பேரை யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் இருந்து பாராளுமன்றம் அனுப்புமாறு பிரபல தொழிலதிபர் விண்ணன் கோரிக்கை முன்வைத்தார்.
நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்று தரப் போகிறோம் என கூறி வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கட்சிகள் தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்ததே வரலாறு.
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் போராடுவோம் எனக் கூறியவர்கள் தமிழ் மக்களை அடகு வைத்து பணப்பெட்டிகளை பெற்றமையை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியவர்களுக்கு பெட்டிகளில் பணம் கைமாறப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் பொது வேட்பாளரின் பொது சின்னமாக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் சின்னத்தை அபகரித்து கட்சிகளின் சின்னமாக மாற்றி விட்டார்கள்.
பாராளுமன்றம் அவர்களுக்கு குடும்ப அரசியலாக மாறிவிட்ட நிலையில் திறமையான இளையவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் செயற்பாடுகளை தமிழ் கட்சிகள் செய்து வருகின்றன.
இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குகிறோம் என கூறும் தமிழ் தேசிய கட்சிகள் திறமையான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை ஏனெனில் அவர்கள் தம்மை விட முன்னோக்கி சென்று விடுவார்கள் என்ற அச்சத்தினால் ஆகும்.
இம்முறை தமிழ் கட்சிகள் பல துண்டுகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தமிழ் மக்களின் நலனை சிந்திக்காமல் எப்படியாவது மீண்டும் பாராளுமன்றம் சென்று விட வேண்டும் என்ற நினைப்பில் கட்சித் தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் திறமையான இளைஞர் யுவதிகள் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் இம்முறை பாராளுமன்ற செல்ல அனுமதிக்க கூடாது.
தெற்கு மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ள நிலையில் 3 இலட்சம் வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 42 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.
இம் முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இள வயதினர் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பங்களிப்பு செய்துள்ள நிலையில் யாழ் தேர்தல் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்படும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் புதியவர்களாக பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
இம்முறை யாழ்ப்பாணம் தேர்தல் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்களுக்கு மேல் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை தமிழ் மக்கள் உணர்வார்கள்.
ஆகவே கட்சி அரசியலும் முதுமை அரசியலும் தமிழ் மக்களை எதிர்கால அரசியலுக்கு பொருத்தமற்றது. ஆகவே தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தை போன்று வடக்கிலும் தமிழ் மக்கள் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அணி திரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.