வலிகாமம் தெற்கில் மாவீரர் நினைவு வளாகம் – சுமந்திரன் சுடரேற்றித் திறந்து வைத்தார்
மாவீரர் வாரம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு வளாகம் நேற்றுக் காலை திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நினைவு வளாகத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் சுடரேற்றித் திறந்து வைத்தார்.
மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், வலிகாமம் தெற்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
மாவீரர் நாளை முன்னிட்டு வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை (கே.கே.எஸ்.) பிரதான வீதியில் மாவீரர் நாள் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







