சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது.
பதவி நீக்கல் தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரியும், அந்தத் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட உப தவிசாளரினால் சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம் மனு தொடர்பான விசாரணைகளின் போது, சட்டத்தரணி கலாநிதி கே.குருபரனின் நீண்டநேரச் சட்டவாதங்களைச் செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் சதீஸ்தரன், வழக்கின் எதிர்மனுதாரர்களுக்குக் கட்டளை அனுப்ப உத்தரவிட்ட போதிலும், கோரப்பட்ட இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்துத் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, சாவகச்சேரி பிரதேச சபைக்குப் புதிய உப தவிசாளர் ஒருவரை நியமிப்பதில் எவ்விதமான சட்டத் தடைகளும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒத்த வவுனியா நகர சபை மேயரின் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கேள்விக்குட்படுத்தி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த வாரம் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









