தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
“இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பெருமளவான நிதிச் செலவில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய போதிலும், தற்போது டெங்கு நோய் நாடளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவியுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்து 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டின் பல மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளன. இந்நிலைமை மேலும் தீவிரமடைந்தால் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கும் சூழலிலும், அரசிடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. எனவே, டெங்கு ஒழிப்பை விரைவுபடுத்தி மக்களைப் பாதுகாப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை வகுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகள் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வெற்றிடங்களால் வழக்கு விசாரணைகள் முடங்கி, கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீழ் நீதிமன்றங்களில் உள்ள தகுதியான அதிகாரிகளை மேல் நீதிமன்றங்களுக்கு நியமிக்கும் பாரம்பரியத்தை மீறி, பதவிக் காலத்தை நீடிக்க முயல்வதற்குப் பின்னால் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த வெற்றிடங்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதால், பாரம்பரியங்களை உடைக்காமல் தகுதியான நீதிபதிகளை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்.
இலங்கை நடுத்தர வருமான நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின் றோம். ஆனால், 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலத்திலும் இந்நிலை சாத்தியமானது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். தற்போதைய அறிவிப்பால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 2018 ஐ விட பொருள்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலையைப் பெருமளவில் அதிகரித்துவிட்டு, பின்னர் சொற்ப தொகையால் குறைத்து அரசு பெருமை பேசுகின்றது. போதிய எரிபொருள் இருப்புக்கள் இருந்த போதிலும், கறுப்புச் சந்தை முதலாளியைப் போல நுகர்வோரைச் சுரண்டி அரசு இலாபம் ஈட்டியுள்ளது. மக்களை வதைத்து வரி வசூலித்து திறைசேரியை நிரப்பியுள்ளதாகக் கூறும் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மாறாக, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும் என மக்களை மேலும் சுரண்டுகின்றது.
ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு 120 ரூபா சான்றிதழ் விலை வழங்குவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி, அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அரசின் நெற்களஞ்சியசாலைகள் நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வராததால் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளை அரசின் அமைச்சர்கள் அவமதிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை. உள்நாட்டு நெல் களஞ்சியங்களில் தேங்கிக் கிடக்கையில், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் அமைச்சர்களிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளனவே தவிர, முறையான திட்டங்கள் எதுவுமில்லை.” – என்றார்










