ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“என்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்கியமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் மேன்முறையீடு, இன்று கொழும்பு சிவில் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்னைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு முற்றிலும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், தற்போது கட்சியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள புதிய பதவிகள் மற்றும் அவர்களால் அவசர அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சட்ட ரீதியாகச் செல்லுபடியற்றவையாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது முற்றிலும் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்படாத ஒரு தற்காலிகக் கட்சி போன்ற நிலையை அடைந்துள்ளது. தற்போதைய சட்டச் சிக்கல்களின் காரணமாக, இந்த நிர்வாகத்தினரால் எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ ஈடுபட முடியாத ஆபத்தான சூழல் காணப்படுகின்றது.
நீதிக்காகக் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து மூன்று வருடங்களாகத் தாம் இந்த நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றேன். நீதிமன்றத்தின் மூலம் தமக்கு முழுமையான நியாயமான இறுதித் தீர்ப்பு கிடைக்கும் எனப் பலமாக நம்புகின்றேன்.
இருப்பினும், கட்சியின் எதிர்கால நலனையும் அதன் இருப்பையும் கருத்திற்கொண்டு, இந்த அரசியல் நெருக்கடிக்குச் சுமுகமான தீர்வைக் காண்பதற்கு நான் எப்போதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கின்றேன்.” – என்றார்.










