தேசிய லொத்தர் சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி, தன்னிச்சையாக மூவருக்கு நியமனங்களை வழங்கி அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், அச்சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்த பகுதியைச் சேர்ந்த ஷியாமலா பெரேரா, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஷியாமலா பெரேரா தேசிய லொத்தர் சபையின் தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், சபையின் ஊழியர் கட்டமைப்பில் அவ்வாறான பதவிகள் இல்லாத பின்னணியிலும், எவ்வித உத்தியோகபூர்வ வெற்றிடங்களுமின்றி மூன்று அதிகாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சட்டவிரோதமாக நியமனங்களை வழங்கியுள்ளார். இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவி அதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் லொத்தர் சபையில் பணியாற்றவில்லை என்பதுடன், அவர்கள் அன்றைய தினங்களில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிக்குழாமில் சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தேசிய லொத்தர் சபைக்கு இந்த அதிகாரிகளிடமிருந்து எவ்வித சேவைகளும் பெற்றுக்கொள்ளப்படாத நிலை நீடித்துள்ளது. எனினும், அவர்களுக்கான மாதாந்தச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தையும் லொத்தர் சபையின் அரச நிதியிலிருந்தே செலுத்துவதற்குத் தலைவர் ஷியாமலா பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார் என்று விசாரணைகளில் மிகத் துல்லியமாகத் தெரியவந்துள்ளது.
அரச நிதியைத் திட்டமிட்டு முறைகேடாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தமைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.










