வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வவுனியா மாநகரசபையின் முதல்வரை, முதல்வர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான நடவடிக்கை.
மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை இவ்வாறு பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நிலை உருவானால், தேர்தல் முறையின் அர்த்தமும் மக்களின் ஆணையின் மதிப்பும் கேள்விக்குறியாகின்றன.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்திருந்தால் அவை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு அறிவிக்கப்படாமல் ஒருதலைப்பட்சமான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழர் தரப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மீது அதிகாரத்தின் மூலம் அழுத்தம் செலுத்தப்படுவது, தமிழர்களுக்கு எதிரான பாகுபாடான அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே, மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து 29.06.2026 அன்று முழுநேர கடையடைப்பும், அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்தில் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.










