“புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளை கூற முடியும்.” – என்று செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
“நேற்றுமுன்தினம் தாடைப்பகுதி உடைந்த நிலையில் உடைந்த தாடை நெஞ்சுப் பகுதியில் காணப்பட்டது. இவ்வாறு பல எலும்புக்கூடுகள் பல பகுதிகளில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அது தொடர்பான ஆய்வுகள் எதாவது மேற்கொள்ளப்படுகின்றதா?” என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுகின்றமை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
புதைக்கப்படும்போது எலும்புக்கூடுகள் உடைந்த நிலையில் இருந்தனவா அல்லது பிற்பாடு நடைபெற்ற நிகழ்வுகளால் எலும்புக்கூடுகளில் உடைவுகள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் ஆய்வுகளின் பின்னரே முழுமையான தகவல்களைப் பெற முடியும்.
செம்மணி மனித புதைப்குழியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகள் நேர்சீராக இல்லாமல் இருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.
புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளைக் கூற முடியும்
மேலும் செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பார்வையிடவுள்ளார் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆனால் இன்னமும் நீதிமன்றத்திடம் அதற்கான விண்ணப்பம் செய்யப்படவில்லை.” – என்றார்.










