ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் ஆண்களுக்கு 3 கிலோ அதிகமாகவும், பெண்களுக்கு 1 கிலோ அதிகமாகவும் பச்சை கொழுந்து பறித்து கொடுக்க வேண்டும் என கூறி கடந்த மே மாதம் பணிபுரிந்த வேதனத்தில் தோட்ட நிர்வாகத்தால் அறவிடப்பட்ட பணத்தை மீண்டும் வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்திடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மஸ்கெலியா மாவட்ட பிரதிநிதி திரு.கணகராஜ் சம்பந்தப்பட்ட தனியார் தோட்ட அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி எவ்விதமான அறவீடும் இன்றி கடந்த மாதம் பணி புரிந்த நாட்களுக்கான வேதனத்தை கட்சி பேதமின்றி அனைவருக்கும் பெற்று கொடுத்தார்.
அத்துடன் அதிக அளவு கொழுந்து பறிபதற்கான காரணத்தை ஹட்டன் தொழில் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
நேற்று 10 ஆம் திகதி தொழில் ஆணையாளர் முன் நிலையில் இப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது.
இந்த தனியார் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 1550/= ரூபாய் வேதனம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் வழங்கும் 200/= ரூபாய் வழங்கப்படுவது இல்லை என அத் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தால் பொறுப்பேற்று அதனை கம்பெனி தோட்டங்களாக நிர்வாகம் செய்து வரும் அனைத்து தோட்டங்களிலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் 200/=கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட போதிலும் தனியார் தோட்டங்களில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அந்த 200/= கிடைப்பது இல்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.













