“ஓணானைப் பிடித்து மடியில் கட்டிய கதையாக, சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனின் கைது விவகாரம் அநுர அரசுக்கு உள்நாட்டில் அரசியல் நெருக்கடியையும், சர்வதேச மட்டத்தில் பாரிய அழுத்தங்களையும் தோற்றுவித்துள்ளது.” – என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இணையப் பத்திரிகையொன்று இன்று வியாழக்கிழமை செய்திக் கட்டுரையொன்று வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘சும்மா தன் பாட்டில் வேலியில் போய்க் கொண்டிருந்த ஓணானைப் பிடித்து மடியில் கட்டிக் கொண்டு, பின் குடையது, குடையுது என்று அல்லல் படுவது’ பற்றிப் பேச்சு வழக்கில் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படி ஒரு சிக்கலில் மாட்டியிருக்கின்றது அநுர அரசு.
தன் பாட்டில் சிவனே என்று பாடிக்கொண்டிருந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, விளக்கமறியலில் அடைத்த விவகாரம் அரசுக்கு உள்நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடியாக மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்ட நடைமுறையாக்கல் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அழுத்தம் தரும் விவகாரமாகவும் மாறி இருப்பதாகத் தெரிகின்றது.
சங்கீத்ஷனின் கைதுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு பெரும்பாலும் நாளை அல்லது அடுத்து வரும் வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது.
அதேநேரம் சங்கீத்ஷனை பிணையில் விடக் கோரி அவர் சார்பில் அவரது சட்டத்தரணி கேசவன் சயந்தன் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து மனுச் செய்ய இருக்கிறார்.
சங்கீத்ஷன் கைது விடயத்தில் பொலிஸார் ஆரம்பத்தில் இருந்தே முற்றும் முழுதாகத் தவறிழைத்தார்கள் என்ற வாதம் இன்று காத்திரமான முறையில் மேல்நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனத் தெரிகின்றது.
சங்கீத்ஷன் விடயத்தைக் கையாளும் சிரேஷ்ட வழக்கறிஞரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கிழக்கு நாடு ஒன்றுக்கு மிக குறுகிய கால பயணம் ஒன்று மேற்கொண்டு சென்றிருப்பதால், இன்று மேல் நீதிமன்றத்தில் பிணைமனுவைச் சமர்ப்பித்து சட்டவாதம் ஒன்றை சங்கீத்ஷனின் சட்டத்தரணி சயந்தனே நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை குறிப்பாக – சங்கீத்ஷனை – கைது செய்து இருக்கின்றமையை சர்வதேச மட்டத்தில் முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். இலங்கையிலிருந்து பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் விசேட வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வருகின்றது. அது, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு அந்நிய செலாவணி ஈட்டலுக்கு மிக முக்கியமான வாய்ப்பாகும். அந்த வரிச்சலுகையை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்குவதாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது உட்பட பல சீர்திருத்தங்களை இலங்கை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஒற்றைக்காலில் நிற்கின்றது. மேற்படி வரிச்சலுகையை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு செய்து வருகையில் இந்த விவகாரம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
இந்த சமயத்தில் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி பாடகர் சங்கீத்ஷனை கைது செய்து, விளக்கமறியலில் வைத்தமை மிக மோசமான உரிமை மீறல் எனத் தெரிவித்து அது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்துடன் விசேட பேச்சுகளை நடத்துவதற்காகத் தமது கட்சியின் பிரதிநிதியாக கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியனைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.
பெல்ஜிய நேரப்படி இன்று மாலை பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய விடயங்களுக்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி சார்ள்ஸ் வைட்லீயை இந்த விடயமாக சாணக்கியன் சந்திக்கின்றார்.
சங்கீத்ஷன் கைது பற்றி பேசுவதும், தொடர்ந்து இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழர் தரப்பின் ஆட்சேபத்தைத் தெரிவிப்பதும் மட்டுமே இன்றைய பிரசல்ஸ் சந்திப்பின் முக்கிய விடயங்களாக இருக்கும் என்று தெரிகின்றது.
கிழக்கு நாடு ஒன்றுக்கு குறுகிய கால விஜயம் மேற்கொண்டிருக்கும் சுமந்திரனும் இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஏவி விட்டிருக்கின்றமை குறித்து தமது விஜயத்தின் போது சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தாம் சங்கீத்ஷன் விவகாரம் குறித்து தொலைபேசியில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுடனும், நேரில் அமைச்சர் சந்திரசேகருடனும் பேசியிருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று சங்கீத்ஷனின் பிணை மனு விண்ணப்பம் யாழ். மேல் நீதிமன்றத்தில் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால், விவகாரம் மேலும் சர்ச்சையாக உருவெடுக்கக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை தொடர்ந்து தவறான முறையில் பிரயோகித்து, பிரஜைகளின் சுதந்திரத்தை அநீதியான முறையில் முடக்குகின்றது என்ற சர்வதேச பிரசாரம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் கொழும்புக்கு மேலும் பல பின்னடைவுகளை கொடுக்கும் என்பது அரசுத் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
இயன்றவரை ஆரவாரமும் சிக்கலும் இல்லாமல் இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்கவே அரசு தரப்பும் விரும்புவதாகத் தெரிகின்றது.
விடயங்கள் சுமுகமாகவும் நல்லபடியாகவும் நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தானே…..! – என்றுள்ளது.










