வடக்கு இஸ்ரேல் மீது தெஹ்ரானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் என தான் கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு ட்ரம்ப்,
“ஈரானியத் தாக்குதல்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இஸ்ரேல் இதற்குப் பதிலடி கொடுக்காது என்று நம்புகிறேன்
.நெதன்யாகு மீண்டும் அவர்களைத் தாக்கினால், இது கடந்த 47 ஆண்டுகள் அல்லது கடந்த 3000 ஆண்டுகளைப் போலத் தொடர்ந்துகொண்டே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் மேலும் குறிப்பிடுகையில்,
“நாங்கள் ஈரானுடன் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு மிக அருகில் இருக்கிறோம். அது ஒரு நல்ல உடன்பாடாக அமையும்.
இப்போது நடக்கும் சம்பவங்களால் அது வீணாகப் போவதை நான் விரும்பவில்லை.நான் இப்போதே நெதன்யாகுவை தொடர்பு கொண்டு, பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கூறப் போகிறேன்.
இரண்டு தரப்பினரும் தங்களது தாக்குதல்களை நடத்திவிட்டனர். இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தியது, ஈரான் தனது தாக்குதலை நடத்தியது.நமக்கு இனி இன்னுமொரு தாக்குதல் தேவையில்லை.
இன்றிரவு மேலும் ஒரு தாக்குதல் நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமா என்பது “தெளிவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.










