தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் ஆரம்பத்தில், பொது ஈகைச் சுடரினை தியாகி பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த முக்கியஸ்தர்கள் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து, தியாகி பொன். சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணிகளான நடராஜா காண்டீபன், வி. மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை தவிசாளர்கள் சார்பில் தி. பிரகாஷ் மற்றும் முன்னாள் போராளிகள் சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், கடந்த காலங்களில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட நிலையில் மீளப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவகுமாரனின் சிலைக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மலர்மாலை அணிவித்துக் கௌரவம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட பொதுமக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மலர்வணக்கத்தைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உறுதியுரை ஆற்றினார்.
அவர் தனது உரையில், “உள்ளூராட்சி மன்றம் ஒன்று வழங்கக்கூடிய உயரிய கௌரவமாக தியாகி பொன். சிவகுமாரின் நினைவேந்தலை நமது சபை முன்னெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அத்துடன் சிவகுமாரனின் தியாகம், போராட்ட வடிவங்கள், தமிழ் மாணவர்களின் எழுச்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான அவரது விடுதலை வேட்கையின் காத்திரமான பங்களிப்பு குறித்தும் அவர் விரிவாக விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து அஞ்சலியுரைகளை அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணி நடராஜா காண்டீபன், முன்னாள் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், அரச உத்தியோகத்தர் செ. தவநாயகம், முன்னாள் அதிபர் அருந்தவபாலன், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பைச் சேர்ந்த கோமகன், கடற்றொழில் மற்றும் காணி விடுவிப்பதற்கான அமைப்பைச் சேர்ந்த முரளி, சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோர் ஆகியோர் ஆற்றினர்.
நிகழ்வின் இறுதியாக, குடும்பத்தினர் சார்பாக தியாகி பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரியும், பிரதேச சபை சார்பாக உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனனும் அஞ்சலிக் கருத்துரைகளை ஆற்றினர்.
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
















