சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது.
இச்செய்தியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004 ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் இதுவாகும். தற்போது இக்கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் பாதுகாப்பற்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (22) முதல் தற்போது வரை குறித்த கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருவதுடன் குறித்த கட்டடத்தில் இரவு வேளையில் போதைப்பொருள் பாவனையும் இந்த முன்னெடுப்பினால் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாட்டினை துரித கதியில் செயற்படுத்திய உரிய அரச திணைக்களத்திற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.












