மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மணல் விநியோகத்தில் ஒரு சீரற்ற நிலை காணப்பட்ட நிலையில் தற்போது மாவட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மணல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தில் ஒரு சீரற்ற நிலைமை காணப்பட்டது. மணலை அதிகமான விலைக்கு விற்கின்ற நிலைமையும், அதேபோன்று சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்படும் நிலைமைகளும் காணப்பட்டது.
எனவே, மணலை ஒழுங்குபடுத்தும் முகமாகவும் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாகவும், நமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பில் பல்வேறுபட்ட கூட்டங்கள் நடைபெற்றன.
அதன் அடிப்படையில், தற்போது மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு சீரான நடைமுறை மன்னார் மாவட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மணல் விநியோகத்தை மேற்கொள்ளும் பொழுது, குறிப்பிட்ட மணல் அகழ்வு இடங்கள் அடையாளம் காணப்பட்டு, மணல் விநியோகத்துடன் தொடர்புடைய புவிச்சரிதவியல் அளவீட்டுப் பணியகம் (Geological Survey and Mines Bureau), நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கூட்டுப் பரிசோதனையின் பின்னர் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் மாவட்ட செயலாளரினால் குறிப்பிட்ட இடங்களில் மணல் விநியோகிப்பதற்காக மணல் அகழ்வு செய்வதற்கான சிபாரிசு புவிச்சரிதவியல் திணைக்களத்துக்கு வழங்கப்படும்.
அதன் பின்னர் புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்திலே மணல் விநியோகத்திற்குரிய அனுமதி வழங்கப்படவிருக்கிறது.
அதன்படி ஒரு கிரமமான முறையில் தொடர்புடைய நிறுவனங்களினால் கூட்டுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சட்டரீதியற்ற முறையில் மணல் விநியோகத்தை மேற்கொள்பவர்களுக்கு எதிராகவும், அதேபோன்று புவிச்சரிதவியல் பணியகத்தினால் வழங்கப்படுகின்ற நிபந்தனைகளை மீறிச் செயற்படுகின்ற மணல் அனுமதிப்பத்திரதாரர்களின் மணல் அனுமதிப்பத்திரம் எதிர்காலத்திலே உடனடியாக ரத்து செய்யப்பட இருக்கிறது.
இதை விட, நாங்கள் தற்போது மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மணல் 85,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலைமை காணப்பட்டது. அதனைத் தவிர்க்கும் முகமாக, நாங்கள் தற்பொழுது மணல் விநியோகத்தினை சீர்ப்படுத்துவதற்காக மணல் விலையையும் நாங்கள் மன்னார் மாவட்டத்தில் நிர்ணயித்திருக்கின்றோம்.
அதன் பிரகாரம் மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான், மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மணல் யார்ட் (மணல் ஸ்டோர்) உள்ள இடங்களில் மணலைப் பெற்றுக் கொள்ளும் போது, அதற்குரிய விலையாக 3 கியூப் (3 Cube) உள்ள டிப்பர் வாகனத்திற்கு 39,250 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த மணல் யார்ட் உள்ள இடங்களில் போய் மணலைப் பெற்றுக் கொள்ளும் பொழுது 39,250 ரூபாய்க்கு 3 கியூப் அளவான மணலினை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை, மன்னார் நகர பிரதேச – மன்னார் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலே 3 கியூப் அளவான மணல் 51,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மன்னார் நகர பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலே (தலைமன்னார், பேசாலை போன்ற பகுதிகளில்) மணல் விநியோகம், மன்னார் நகரத்திற்கு அப்பால் கிலோமீற்றருக்கு 350 ரூபாய் என்ற மேலதிகமாகச் செலுத்தி மணல் தேவைப்படுவோர் மணலினை பெற்றுக் கொள்வதற்குரிய சந்தர்ப்பமும் தற்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மணல் வழங்க உடன்பட்ட மணல் அனுமதிப்பத்திரதாரர்களுக்கே இப்பொழுது மணல் அனுமதிப்பத்திரம் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த மணல் குறிப்பிட்ட விலைக்கு மேலதிகமாக எக்காரணம் கொண்டும் மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறி மணல் விற்பனை செய்வோரின் மணல் அனுமதிப்பத்திரம் உடனடியாக ரத்து செய்வதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மன்னார் மாவட்டத்திலே மணல் தேவைப்படுவோர் பிரதேச செயலகங்களிலும், மற்றும் நகர சபை, பிரதேச சபைகளிலே தங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்கும் இடத்து உடனடியாக நாங்கள் அவர்களுக்குரிய மணலினை இந்த நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மணல் தேவைப்படும் வீட்டுரிமையாளர்கள், அதேபோன்று ஒப்பந்தக்காரர்கள் (Contractors) தங்களது பிரதேச செயலகங்களில் அல்லது நகர சபை, பிரதேச சபைகளுடன் விண்ணப்பிக்கும் இடத்து நாங்கள் மிக விரைவில் மணல் விநியோகத்தைச் செய்யவிருக்கிறோம்.
மன்னார் மாவட்டத்தின் மணல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது 22 மணல் அனுமதிப்பத்திரதாரர்களால் விநியோகிக்கப்படும் மணலானது குறிப்பிட்ட காலம் வரை மன்னார் மாவட்டத்திற்குள்ளேயே விநியோகிக்கப்பட இருக்கிறது.
மன்னார் மாவட்டத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் மற்றும் ஏனைய மாவட்டங்களுக்குமான மணல் விநியோகம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, இங்கே எடுக்கப்பட்ட அந்த தீர்மானத்திற்கு அமைவாக மணல் விநியோகத்தில் ஈடுபடுமாறு நாங்கள் மணல் அனுமதிப்பத்திரதாரர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், மணல் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களிலும், நகர சபை, பிரதேச சபைகளுடன் தொடர்புகொண்டு தங்களுக்குரிய மணலைக் கோரிப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.










