சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு பிணை வழங்கபட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் அவரை விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா பிரிவுப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த தேரர், இன்றையதினம் அநுராதபுரம் தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேரருக்கு தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 100,000 ரூபாய் ரொக்கப் பிணை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு நீதிமன்றம் உடனடியாகத் தடை விதித்துள்ளது.
பிணை நிபந்தனைகளை மீறினாலோ அல்லது வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் செல்வாக்கு செலுத்த முயன்றாலோ பிணை உத்தரவு உடனடியாக இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதவான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை சிறுமியின் உறவினர்களினால் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று கண்டன போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.










