வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது என மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்த்துள்ளார்.
வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனை உறுதிசெய்வது அதிகாரிகளாகிய தமது தலையாய கடமையாகும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி, செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து 23 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்த இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர்
நிகழ்வில் உரையாற்றிய போது
ஒரு நிறுவனத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைவரிலேயே தங்கியுள்ளது எனக் கூறினார்.
அதிலும் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் அதிபர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அப் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் மாணவர்கள் மீது அதீத அக்கறை எடுத்துச் செயற்படுவதை பாராட்டிய ஆளுநர்,
இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து ஓர் அணியாகச் செயற்படுவது சிறந்தது என்றும் கூறினார்.
அதே போன்று பெற்றோரின் கண்காணிப்பு குறைவால் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பிள்ளைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வரும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பணி உண்மையில் அளப்பரியது என அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் கிராமப்புறங்களின் அபிவிருத்தியிலும், உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிலுமே கூடுதல் அக்கறை செலுத்துகின்றது என குறிப்பிட்ட ஆளுநர்
கல்வியால் சமூகம் உயர்வடையும்போது, கிராமமும் தானாகவே வளர்ச்சியடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தன்னை பொறுத்தவரையில், வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களிலேயே அமைந்துள்ளன என்றும்
அங்குள்ள மாணவர்களின் கல்விக்கு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு அந்தப் பாடசாலைகள் மாத்திரமே என்றும் ஆளுநர் கூறினார்.
அந்த மாணவர்களுக்கு அங்கு கல்வி கிடைக்காவிட்டால், அவர்களின் எதிர்காலமே இருண்டுவிடும் என எச்சரித்த ஆளுநர்,
எனவேதான், அத்தகைய பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தாம் முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்றங்களின்போது இவ்விடயத்தில் தாம் கூடுதல் அக்கறை செலுத்துவதாலேயே பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், வன்னி மாணவர்களின் கல்வியை உறுதி செய்வதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்










