பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அந்நாட்டின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து இருதரப்புக் கல்வி ஒத்துழைப்புகள் குறித்துப் பாரியளவில் கலந்துரையாடியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே வலுவான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை சர்வதேச மட்டத்தில் உறுதிசெய்தல், மற்றும் மாணவர்கள் – கல்வியாளர்களுக்கான புதிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.
மேலும், இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் நவீன ஆராய்ச்சித் துறைகளில் புதிய கூட்டு முயற்சிகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பிரிட்டன் அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் தற்போது வெற்றிகரமாக நடைமுறையிலுள்ள ‘செவ்னிங்’ புலமைப்பரிசில்கள் மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டங்களைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.
இத்தகைய உயர்தரப் புலமைப்பரிசில் திட்டங்கள், இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையே நீண்டகால கலாச்சார மற்றும் கல்விசார் தொடர்புகளை வளர்ப்பதற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பதைப் பிரதமர் இச்சந்திப்பில் விசேடமாகச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு உத்திகளுக்குப் பிரிட்டனின் நவீன கல்வித் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி அனுபவங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த இராஜதந்திரச் சந்திப்பில் இரு தரப்பாரும் பரஸ்பரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.












