மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் உரை நிறைவடைந்த அடுத்த நொடியே, நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடனடி தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
மஸ்கெலியா வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஸ்கேன் இயந்திரம் இல்லாமை மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையடுத்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியை நேரடியாக தொலைபேசி கலந்துரையாடலில் இணைத்து, குறித்த பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆலோசித்துள்ளார்.
இதன்போது, மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய்மார்களை பரிசோதிக்கும் “ஸ்கேன் இயந்திரத்தை” வழங்க நடவடிக்கை எடுக்கவும், பொகவந்தலாவை வைத்தியசாலையில் காணப்படும் “மருத்துவர் மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கு” உடனடி தீர்வு காணவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்த உடனேயே அதற்கான தீர்வை நோக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










