நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு நாட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளில் 1 இலட்சத்து 85 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் தேங்கிக்கிடப்பதாகவும், அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் ஒரு மெற்றிக்தொன் கீரி சம்பா நெல் களஞ்சியசாலையில் தேங்கிக் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலுள்ள நெற் களஞ்சியசாலைகளில் எத்தனை மெற்றிக் தொன் சம்பா, கீரி சம்பா நெல் தேங்கிக்கிடக்கிறது என்பதை கௌரவ விவசாய அமைச்சர் வெளிப்படுத்த வேண்டுமெனவும் கோரினார்.
எனவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் கொள்வனவையும், சந்தைப்படுத்தலையும் வினைத்திறனாக முன்னெடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது விவசாய அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் 21.05.2026 இன்று இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மூன்று முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட ஒன்பது பிரேரணைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
இன்று இந்த உயரிய சபையிலே நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள ஒன்பது பிரேரணைகள் மீதான விவாதத்தில், வன்னி மண்ணைச் சேர்ந்த மக்களின் சார்பாளனாக நின்று சில முக்கிய யதார்த்தங்களை அரசின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர கடமைப்பட்டிருக்கிறேன்.
2026 ஏப்ரல் 02ஆம் திகதியிட்ட 2482/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் உள்நாட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக – பொன்னி சம்பா, பால் பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாட்டு உரிமத் தேவை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஓர் இறக்குமதியாளர் அதிகபட்சமாக 1040 மெற்றிக் தொன் அரிசியை மே 31ஆம் திகதிக்குள் சுங்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச தரப்பு தகவல்களின் படி நெல் களஞ்சிப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளில் 1 இலட்சத்து 85 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் தேங்கிக்கிடப்பதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று பருவகாலங்களாக தொடர்ச்சியாக கொள்வனவு செய்யப்பட்ட நெல் இன்னும் முறையாகச் சந்தைப்படாமல் முடங்கிக்கிடக்கிறது. இவற்றுள் எத்தனை மெற்றிக் தொன் சம்பா, கீரி சம்பா நெல் தேங்கிக்கிடக்கிறது என்பதை கௌரவ அமைச்சர் இப்பேரவைக்கு வெளிப்படுத்தவேண்டும்.
ஒருபுறம், ஓர் இலட்சத்துக்கும் அதிகமான மெற்றிக் தொன் நெல் அரச களஞ்சியங்களில் வீணாகிக்கொண்டிருக்கிறது. மறுபுறம், நுகர்வோருக்கு சம்பா அரிசி இல்லை என்ற காரணத்தைக் காட்டி வெளிநாட்டிலிருந்து பொன்னி சம்பா, பால் பொன்னி சம்பா அரிசிகளை இறக்குமதி செய்ய அவசர தளர்வுகளை இந்த அரசு ஏற்படுத்துகிறது. இது என்ன வகையான பொருளாதாரக் கொள்கை என்று எமக்கு புரியவில்லை.
தொடர்ந்து மூன்று பருவகால நெல், கையிருப்பில் உள்ள போது, அவற்றை ஏன் இன்னும் காத்திரமான முறையில் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க முடியவில்லை? அரசாங்கத்தின் இந்த மந்தகதி, நிர்வாகத்திறன் வீழ்ச்சியால் எமது உள்ளூர் நெல் உற்பத்தியின் தரம் குறைவடைந்து வீணாகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வினைத்திறனற்ற சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவுத் தாமதங்களால் ஏற்படும் கோடிக்கணக்கான நட்டத்துக்கு பொறுப்பேற்கப்போவது யார்? இந்த நாட்டு மக்களின் வரிப்பணம் தானே!
இதோ! இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறுபோகத்தின் அறுவடைக்கு முல்லைத்தீவின் குமுழமுனை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட பிரிவில் 3492.9 ஏக்கரில் (கிட்டத்தட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் 13% நெற்செய்கை) மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடைக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை.
இப்பிரிவிலும் அதாவது குமுழமுனை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட வயல்களில் கிட்டத்தட்ட 1325.625 ஏக்கர் அளவில் கீரி சம்பா நெல் உற்பத்தியே மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு இலங்கை தழுவிய வகையில் குள திருத்த வேலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் சிறுபோக வேளாண்மையை அடுத்தடுத்த மாதங்களில் அறுவடை செய்யவுள்ளோரின் நெல் உற்பத்தியையும் காலந்தாழ்த்தாது நியாய விலையில் நெல் சந்தைப்படுத்தல் சபை பெற்றுக்கொள்ளுமா?
இவ்வாறு பெறப்படுகின்ற நெல் கொள்வனவுக்கு இறக்குமதிச் சலுகைக்கு அளிக்கும் முன்னுரிமைக்கு மேலான முன்னுரிமையை விவசாய அமைச்சு அளிக்குமா?
இவ்வாறான உள்ளூர் நெல் உற்பத்தியை நெல் சந்தைப்படுத்தல் சபை நியாய விலையில் பெற்று அவ்விவசாயிகளின் விளைச்சலை உடன் சந்தைப்படுத்த இவ்வரசு தயாராக உள்ளதா? என்று இப்பேரவையில் கௌரவ விவசாய அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த போகத்தில் முல்லைத்தீவில் இருந்து 2500 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய உத்தேசித்திருந்த போதும் ஏற்கனவே நெல் நிரம்பிய களஞ்சிய சாலைகள் வெறுமையாக்கப்படாததால் நெல் களஞ்சிய சாலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கடைசியில் 2195.82 மெற்றிக்தொன் நெல்லே முல்லைத்தீவு மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்டது. அதுபோல் வவுனியாவில் 1444.76 மெற்றிக் தொன் நெல்லே கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையால் கடந்த 2026.03.12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொள்வனவு செய்யப்பட்ட நெல் தேக்கி வைக்கப்பட்ட போதும், தேக்கி வைக்கப்பட்ட நெல்லை சந்தைப்படுத்தும் போதும்,
காட்டாத அக்கறையையும் அவசர நிலையையும் தற்போது இந்த அரிசி இறக்குமதியில் அரசு காட்டுகிறதோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.
சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவக்கூடும் என்ற வகையில், தட்டுப்பாட்டை இழிவளவாக்கவும், சந்தையில் அரிசி விலை பாரியளவில் உயர்வதைத் தடுக்கவும், நுகர்வோருக்கு நியாய விலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும் தான் இந்த அவசர நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்றால், சமநேரத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாகவும் தற்போதிருந்தான நெல் கொள்வனவையும் உறுதிப்படுத்தி உள்ளூர் நெல் உற்பத்தியை உச்ச அளவில் சந்தைப்படுத்தலில் பயன்படுத்துமாறு இப்பேரவை ஊடாக கௌரவ விவசாய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
அடுத்துவரும் இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளிலும் இவற்றை நாம் மீள மீள இடித்துரைக்க இடமளிக்காது, இப்போது அரிசி இறக்குமதிக்கு காட்டும் அதே அக்கறையை களஞ்சிய சாலைகளை வெறுமையாக்கி சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதிலும், களஞ்சிய சாலைகளில் உள்ள நெல்லை உடனே அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிக்க முறையான வேலைத்திட்டத்தை இவ்வரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பேரவையில் கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.










