இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை இணைத்து இணையத்தில் பரவிய ‘மெலடி’ மீம்ஸ் மற்றும் மிட்டாய் குறித்த காணொளி காரணமாக, இந்த உயர்வு பதிவாகி உள்ளது.
இந்த அதிரடி விலை உயர்வுக்குப் பின்னணியில் ஒரு பெரும் குழப்பம் நீடிப்பதாகப் பங்குச்சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புகழ்பெற்ற ‘மெலடி’ (Melody) மிட்டாயைத் தயாரிப்பது ‘பார்லே புராடக்ட்ஸ்’ (Parle Products) என்ற நிறுவனமாகும்.
இந்நிறுவனம் பொதுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத (Unlisted) ஒரு தனியார் நிறுவனமாகும்.
ஆனால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திற்கும், இந்த மிட்டாயைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் இடையே எந்தவொரு வணிகரீதியான தொடர்பும் இல்லை.
இது வெறும் பெயரில் மட்டுமே ஒற்றுமையைக் கொண்ட முற்றிலும் வேறொரு நிறுவனமாகும்.
இருப்பினும், பெயரிலுள்ள ‘பார்லே’ என்ற ஒற்றுமை காரணமாக முதலீட்டாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அவசர அவசரமாக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முண்டியடித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியப் பிரதமருக்கு ‘பார்லே மெலடி’ மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசாக வழங்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு ஒன்று நேற்றையதினம் இணையம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகளைப் பெருமளவில் வாங்கத் தொடங்கினர்.
இதனால் அன்றைய தினமே அந்நிறுவனத்தின் பங்கு விலை 5% என்ற அதன் ஒருநாள் உச்சவரம்பை எட்டியது.
இந்த நிலையில் இந்த விசித்திரமான நிலைமை இன்றும் நீடித்தது.
இன்றைய வர்த்தக அமர்விலும் பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை மீண்டும் ஒருமுறை 5% உச்சவரம்பைப் பதிவு செய்தது.
இதன்படி, கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒட்டுமொத்தமாக 10% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது பங்குச்சந்தை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.










