நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (8) போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 121 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மாதிவெல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் பாரியளவு போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 01 கிலோகிராம் 58 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மாதிவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் களனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 78.75 லீற்றர் (105 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் விவகாரங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










