நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல்லேகம – அளுத்பொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளுத்பொலவிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, எதிரே வந்த உந்துருளியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநர், பின்னால் அமர்ந்து வந்தவர் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உந்துருளி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் துனகஹ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொடதெனியாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – குருணாகல் வீதியின் உடுகொடகெதர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடதெனியாவிலிருந்து திவுலப்பிட்டிய நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று, வீதியை கடக்க முயன்ற பாதசாரியான முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.
திவுலப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் உந்துருளி ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை – அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்துள்ளார். பின்னர் அவர் காரின் முன்பக்கமாக வீதியை கடக்க முயன்றபோது, கார் முன்னோக்கி நகர்ந்ததால் அவர் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.
விபத்தின்போது காரை செலுத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










