தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவியுங்கள் என ஜனாதிபதியிடம் தாம் நேரில் வலியுறுத்தினார் என்று யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்றுமுன்தினம் பிற்பகல் யாழ். ஸ்ரீ நாக விகாரைக்கும் சென்று அங்கு விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக யாழ். ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தவகையில் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். பொதுமக்களுடைய காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார் என்றே தெரிகிறது.
விகாரைக்குப் பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி விரைவாக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.
எனக்கும் இந்தக் காணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நயினாதீவு ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதிக்கே அங்கு தொடர்பு உண்டு. ஆனால், பொதுமக்கள் சார்பாகவே எனது கருத்தை முன்வைத்தேன்.
மேலும் போதைவஸ்து பிரச்சினைகள் காணப்படுகின்றமையால் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஆகவே, வடக்கு மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற விடயத்தையும் தெரிவித்தேன்.” – என்றார்.










