தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னரே, இந்த ஓவியங்கள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, இருப்புப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோதிலும், தற்போது கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
காணாமல் போயுள்ள இந்த வரலாற்று மதிப்புமிக்க ஓவியங்கள் குறித்து அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து கலாச்சார விவகாரங்கள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










