நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து நேற்று முன்தினம் (14) கைது செய்யப்பட்டார்.
நேபாள அரசின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் ஜே.கே. பாய் உட்பட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவினர் நேற்று (15) மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










