கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் முன்னைய காலத்தில் கண்டி வீதி என அழைக்கப்பட்ட பிரதான வீதி அழகாபுரி கிராமத்தில் சுமார் 300 குடும்பத்துக்கு மேல் வசித்து வரும் நிலையில் பல வருட காலமாக இவ்வீதி கிரவல் வீதியாக காணப்படுவதுடன் குண்டும் குழியுமாக காணப்படுவதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் தமது நாளாந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் கிரவல் தோய்ந்த நிலையில் வெளியில் சென்று வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பெரிதும் சுவாச நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் கனியவள திணைக்களத்தின் அனுமதியுடன் தமது வாழும் பகுதியில் பாரிய அளவிலான கிறவல்கள் அகழப்பட்டு வேறு பகுதிகளுக்கு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் இருந்து அகழப்பட்டு வருவதன் காரணமாக இவ் வீதியும் பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களும் முற்று முழுதாக அழிவடைந்து வருகின்றது. எமது நாளாந்த தேவைக்காக சாதாரணமாக நாங்கள் அப்பகுதியில் சென்று எமது நாளாந்த தேவைக்காக விறகு வெட்டச் சென்றால் கூட வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரிவினர் தமக்கு பெரும் அச்சுறுத்தலை விடுத்து வரும் நிலையில் இப்பகுதியில் பாரிய அளவிலான இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதை கண்டு கொள்வதில்லை. இது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் எமது பகுதியில் காணப்படுகின்ற ஒரு கிலோமீற்றர் வீதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக புனரமைத்து தருமாறு மிக பணிவுடன் வேண்டுகின்றோம் என தெரிவித்தனர்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில், எமது பகுதியில் தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகள் சுயேட்சை குழுக்கள் எமது காலடியில் வந்து உங்கள் தேவைகள் என்ன எங்களால் நிறைவேற்றித் தர முடியும் நாங்கள் உடனடியாக அதை நிறைவேற்றுவோம் என பல்வேறு வகையில் உமக்கு வாக்குறுதிகளை வழங்கிச் செல்கின்றார்கள் பின்னர் அடுத்த தேர்தல் வரும்பொழுதுதான் அவர்களை காண முடிகின்றது என தெரிவித்தனர்.













