இதுவரை காலமும் வார இறுதி நாட்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று (26) கருத்துக் கூறுகையில், “பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த புகையிரதம் தனது சேவையை முன்னெடுத்து வந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தனது சேவையை முன்னெடுப்பதுடன் கொழும்புக் கோட்டையிலிருந்து 5.45 யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிப்பதுடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம் 11.49 வந்தடையவுள்ளது.
அதன் பின்னர் காங்கேசன்துறையை 12.13 சென்றடையும். மீண்டும் மாலை 1.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும். குறித்த புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து 2.12 க்கு புறப்பட்டு கொழும்பு கோட்டையை இரவு 8.33 க்கு சென்றடையும். அதேவேளை கல்கிசையை இரவு 8.55 க்கு சென்றடையும் என்ற ஒழுங்கில் சேவையை முன்னெடுக்கவுள்ளது.
இதேநேரம் குறித்த கடுகதி புகையிரத சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒரு சில தினங்களில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்த யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் அதனை புகையிரத திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இதுவரை காலமும் 5.45 க்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதமானது எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் காலை 6.35 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










