தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும், முடிவுறுத்தப்படாத நிலையில் இருந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற வகையிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் நேற்று வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
முதல்வர் ஷல்மானுல் ஹரீஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஆசிரியர்களின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைபெற்றது.
மாறிவரும் சவாலான, சிக்கலான உலகில் வெற்றி கொள்ளத் தேவையான ஆளுமைப் பண்புகளை வளர்த்தெடுத்தல் பாடசாலையின் பிரதான பணி என்பதை தலையாய குறிக்கோளாக கொண்டு மாணவர்களுக்கு அவசியமான சூழ்நிலையில் கழிவுகளால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து மாணவர்களையும், சமூகத்தையும் பாதுகாக்க கழிவு முகாமைத்துவ செயன்முறை மாணவர்களுக்கு அவசியமானது என அதிபர் ஷல்மானுல் ஹரீஸ் தெரிவித்தார்.
குறிப்பாக ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் சரியான நெறிப்படுத்துதல் இல்லாமையினாலும், அந்தச் சிறிய வயது மட்டத்தினருக்குரிய பக்குவம் கிடைக்காமையினாலும், ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் கழிவகற்றும் செயற்பாடுகள் சிறந்த முறையில் பின்பற்றப்படாததால் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கும் அதிகமான முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலைகளை கருத்தில் கொண்டு ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் குறிப்பாக வகுப்பறைகளிலேயே கழிவுகளை அகற்றும் செயன்முறையை மாணவர்களுக்கு ஒரு செயற்பாட்டு முறையில் திரும்பத் திரும்ப நிறக் குறியீட்டு முறையில் மீள வலியுறுத்துவது ஊடாக இந்த நடைமுறையில் வெற்றி கொள்ள முடியும் என்று அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான இணைப்பு ஆசிரியர்களான கே.எம்.ஜனூஸ் மற்றும் சம்சாத்பேகம் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்து வருவதாகவும் அதிபர் தெரிவித்தார்.














