கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் செயற்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் காசாவில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
சுமார் 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 7 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










