அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 7 ஆம் திருவிழாவான நேற்றைய தினம் (23) வேட்டைத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, பொம்மலாட்டங்களுடன் அராலி மத்தி பேச்சியம்பாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு வேட்டையாடினாள். பின்னர் பக்தர்கள் புடைசூழ அங்கிருந்து மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தாள்.
ஆலயத்தின் வேட்டைத் திருவிழா கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
கடந்த 17.06.2025 அன்று ஆரம்பமான திருவிழாவானது 25 ஆம் திகதி வேள்வி உற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.












