மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம்குமார் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் செபமாலை கமலச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதன் போது சபையில் உள்ள 21 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
ஏனைய 20 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் செபமாலை கமலச்சந்திரன் 05 வாக்குகளையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம்குமார் 15 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம்குமார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தொழிலாளர் கட்சி ஆகியவை ஆதரவு வழங்கியது.
மேலும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் நிஸாம் நிஜாத் போட்டியின்றி உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.














