மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்கு கொண்டனர்.
இன்று புதன்கிழமை(11) காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து, எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே, அடிக்காதே அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் குறித்த இரு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து மகஜரை கையளித்தனர்.
மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கு அறிவேன்.
மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போதே குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“எங்களையும், எங்கள் வாழ்விடங்களையும், எங்கள் வளங்களையும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க உங்களை வேண்டுகின்றோம்.”
கடந்த ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை நாம் சாத்வீக முறையில் தொடர்பாடல்கள் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும், பல துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பல அரச நிறுவனங்களுடன் மாவட்ட, மாகாண மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாகவும் எமது நாட்டையும், எமது மாவட்டத்தையும், எமது வாழ்விடங்களையும், எமது வளங்களையும், எமது வாழ்வாதாரங்களையும் பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும், மகிழ்வுடன் வாழவும் முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வருகிறோம்.
ஆனால் இதுவரைக்கும் இலங்கை நாட்டு மக்களாகிய நாம் பல்வேறு தளங்களிலும், பல்வேறு விடயங்களிலும், திட்டமிட்ட முறையில் நடைபெறும் பல பயங்கரமான அழிவுகளை சந்தித்து வந்து கொண்டு இருக்கின்றோம். எங்களுக்குரிய மனித உரிமைகள் அனைத்தும் இழந்த நிலையில், நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட நிலையில் உங்கள் ஆட்சியில் வாழ நேரிட்டிருப்பது வேதனைக்குரிய, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலையாக உள்ளது.
எமது மாவட்டத்தில் நடைபெறும் சரியான முறையில் திட்டமிடப்படாத திட்டங்களும், மக்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காத திட்டங்களும், நாட்டிலுள்ள பல்வேறு சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் திட்டங்களும், எமது மனித உரிமைகளை மீறும் திட்டங்களையும், எமது வாழ் விடங்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி, மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் நீண்ட வாழ்வினை பாதிக்காத, வளங்களை பாதுகாக்கின்ற, வதிவிடங்களை அழிக்காத, சுற்றுச்சூழலை பாதிக்காத திட்டங்களை மட்டும் முன்னெடுக்குமாறு இலங்கை நாட்டு மக்களாகிய நாம் அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
இப்போது எமது மாவட்டத்தில் எமது வாழ்வினை அழித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள், மனித உரிமை மீறல்கள் சில
- மன்னார் தீவில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் (பல நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் அனுமதியுடன் ஆதரவுடன் செய்து வருகிறது. உதாரணம் தாழ்வுபாடு, கீரி, தரவன் கோட்டை, சாந்திபுரம், சவுத்பார், சிலாவத்துறை, காயாக் குழி போன்ற சில இடங்களில்.
- வெளிநாட்டு தனியார் கொம்பனிகளினால் எமது இலங்கை நாட்டையும், மன்னாரையும் முற்றாக அழித்து எங்கள் வளங்கள் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல மன்னார் தீவிலும், மன்னார் பெரும் நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்படும், மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வளங்களை அழிக்கும், மனிதன் வாழும் உரிமைகளை அழிக்கும் பல கனிய மணல் அகழ்வு திட்டங்கள். இரண்டு நிறுவனங்களால் கனிய மண் அகழ்வு திட்டங்களை முன்னெடுப்பதற்கான திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்படுகிறது.
- பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் கடல் வளங்கள், அத்துமீறிய இந்திய மீனவர்கள் வருகை, சட்டங்களுக்கு எதிரான மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல், போன்ற செயல்களால் கடல் வளங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டு வருகின்றது.
- மக்களின் வாழ்விடங்களும், காணிகளும் அபகரிக்கப்படுதல். மக்களின் தேவை கருதியும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படும் வகையில் காணிகள் இன்னும் பங்கிட்டு கொடுக்கப்படாமல் காலங்கள் பிற் போடப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். (இதுவரை 4000 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு காணிகள் கேட்டும், 800 க்கு மேற்பட்ட இளையோர் சுய தொழில்கள் தொடங்க காணிகள் கேட்டும், மன்னார் மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.)
இவை போன்ற பல பாரிய அழிவுகளை இலங்கைக்கும், எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் ஏற்படுத்தும், பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திடங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த கண்டன, எதிர்ப்பு ஊர்வலத்தில் நீங்கள் ஆட்சி செய்யும் இலங்கை நாட்டின், மன்னார் மாவட்டத்தின் மக்களாகிய நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் அரச அதிபரிடம் கையளித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.











