சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு நிகழ்வு வத்திராயனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில், சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்ற இந்நிகழ்வு வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது. வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. சி. சிவகுமார் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு வழிநடத்தப்பட்டது.
கிராமத்தின் மீதான பற்றும் கல்விப்பணியும்
பாராட்டுக் கௌரவம் பெற்ற ஆசிரியை திருமதி வில்வராசா உதயஸ்ரீ, யாழ்ப்பாணம் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப மற்றும் உயர்கல்வியைக் கற்றவர் என்பதும், வத்திராயன் கிராமத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்வித்துறையில் 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, முல்லைத்தீவு கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் (மு/கைவேலி அ.த.க) சிரேஷ்ட ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். அத்துடன், சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றார்.
அவரது காத்திரமான கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி கௌரவித்த இந்நிகழ்வில், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.













