“குளோரின் மற்றும் Caustic Soda உற்பத்தி செய்யும் நோக்குடன் மக்கள் எதிர்பார்த்த பரந்தன் இரசாயன தொழிற்சாலை மிக விரைவில் மீள இயக்கப்படவுள்ளது” என பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைவர் சதானந்தம் நேசராஜன் தெரிவித்துள்ளார்.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள விரைவாக இயக்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆராயும் நோக்குடன் பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்றைய தினம் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், “1954 பரந்தன் பக்றி என்ற பெயரில் ஆரம்பித்த குறித்த இரசாயனத் தொழிற்சாலையானது பின்பு பரந்தன் கெமிக்கல் கோப்பிரேசன் என்ற பெயரில் இயங்கி வந்தது. நாட்டின் யுத்த நிலைமை காரணமாக 1983ம் ஆண்டுக்கு பின்பு இயங்கவில்லை. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததைத்தொடர்ந்து விரைவாக ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த இரசாயன தொழிற்சாலை மூலம் குளோரின் மற்றும் Caustic Soda உற்பத்தி செய்யப்படவுள்ளது. தேசிய அளவில் நீர் சுத்திகரிப்புக்கு குளோரின் இறக்குமதி செய்யப்படுகின்றது. இங்கு உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதியை நிறுத்த முடியும். இந்த மாவட்டத்தில் எங்களின் வளத்தை பயன்படுத்தி இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவித்தார்.


