இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி பிணக்கு ஒன்று தொடர்பில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21.05) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் (22.05) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


