வனஇலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மக்கள் காணிகளில் எல்லை கற்கள் இடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காணி ஆகிய பிரதி அமைச்சர்களின் தலைமையில் வனஇலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09.04) இடம்பெற்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இக் கலந்துரையாடலில் மக்களது காணியில் எல்லை கற்கள் இடுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எமது வடமாகாணத்தில் கூடுதலான பிரதேசங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ஊடாக அளவீடு செய்யப்பட்டு கடந்த கால அரசாங்கங்களினுடைய வர்த்தமானியின் பிரகாரம் அளவீடுகள் இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறித்த திணைக்களங்களில் பணிபுரியும் கீழ் மட்ட சில அதிகாரிகள் மக்களது காணிகளை அவர்களது நிலமையை கருத்தில் கொள்ளாது அடாத்தாக செயற்படுவது தொடர்பிலும் சுட்டிகாட்டினோம்.
எனவே, அதை நிவர்த்தி செய்யும் முகமாக காத்திரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் காலங்களில் கற்களை இடும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச வாசிகள் ஆகியோரின் ஆலோசனையுடன் மீண்டும் அளவிடும் பணியை செய்ய வலியுறுத்தப்பட்டதுடன், அரசாங்க அதிபர்களால கோரிக்கை முன்வைக்கப்படும் மக்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் கத்திரமான கலந்துரையாடல்கள் பல்வேறு தரப்பினரையும் உள்வாங்கி இடம்பெறும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தலைமையில் வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களையும் உள்ளடக்கி நிரந்தர தீர்வைக் காண முடிவு எடுக்கப்பட வேண்டும் என தீர்மானித்தோம். வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புடைய காணிப் பிரச்சனைகளை தீர்க்க காத்திரமான நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் மூலம் காணி வழங்குதல் மற்றும் காணிப்பிரச்சனை தொடர்பாக காத்திரமான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


