ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்.சி.பி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல் நிர்வாகம் 10 அணி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐ.பி.எல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐ.பி.எல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 துடுப்பாட்டவீரர்கள் துடுப்பெடுத்தாட முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் துடுப்பாட்டம் முடிவுக்கு வரும்.
ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஓட்டங்களைப் பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றாலும் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.