கல்விக்கான முதலீடு செலவல்ல, அது எதிர்காலத்திற்கான முதலீடு எனக் குறிப்பிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கல்விக்கான ஒதுக்கீடுகளை சமத்துவஅடிப்படையில் மேற்கொண்டு, தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துமாறும் பிரதமரும், கல்விஅமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை வன்னியில் பெருமளவான பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதியின்மை, அதிகளவான அதிபர், ஆசிரியர், பணியாளர்களின் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுதல் உள்ளிட்ட விடயங்களையும், தகவல் தொழில்நுட்ப கல்வியில் ஏனைய மாகாகாணங்களைவிட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றில் இன்று (10.03.2025) இடம்பெற்ற, 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெவவுத்திட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள்தான் கல்வி அமைச்சுக்கும் பொறுப்பாக இருக்கின்றீர்கள். நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கின்றது.
அந்தவகையிலே கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் என்ற நோக்கிலே அரசின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடுகள் அமையப்பெற்றிருக்கிறது. தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமே கல்வி என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் இம்முறை இப்பாதீட்டிலே உள்ளடக்கப்பட்டமையை இந்த நேரத்தில் வரவேற்றுக்கொண்டு கல்விக்கான ஒதுக்கீடு தீவளாவிய வகையில் சமத்துவ அடிப்படையில் பகிரப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள் என்றே வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினராக நானும் கேட்டுக்கொள்கிறேன்.
பாடசாலை உட்கட்டுமான மேம்பாட்டுக்காக 10000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். போதுமானதற்ற கட்டடங்கள், கட்டிமுடிக்கப்படாத வகுப்பறைக் கட்டடங்கள், நூலகங்கள், ஆய்வுகூடங்கள் இன்றி வன்னிப்பிராந்தியப்பாடசாலைகள் இன்னமும் இருப்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். வன்னியில் வாழும் எங்கள் பிள்ளைகள், போதுமான ஆசிரியர்கள் இன்றி, இணைய வசதி இன்றி, முறையான வழிகாட்டல்கள் இன்றி பாடசாலை மட்டத்திலே மிகவும் இடர்படுகின்றார்கள்.
பாடசாலைகளில் நிலவும் இடைவிலகல்கள் இன்றளவும் வன்னிப்பிராந்தியத்தில் அபாயநிலையிலேயே காணப்படுவதை இப்பேரவையிலே முன்வைக்கிறேன்.
வன்னிமாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானவை ஊழியர் பற்றாக்குறை. வன்னி மாவட்டத்தில் உள்ள 6 கல்வி வலயங்களில் குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம், அழகியல் பாடங்கள், விசேட கல்வி, உயர்தர பௌதிகவியல், இணைந்த கணிதம், வணிகக்கல்விபாடங்களுக்கு ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது.1AB பாடசாலை தொடக்கம் வகை 2 பாடசாலை வரை உரிய பாட ஆசிரியர்கள் இன்மையால் நீங்கள் முன்மொழியும் தரமான கல்வியை எங்கள் மாணவர்கள் பெற இயலாதுள்ளனர். தரமான கல்வியைக்கொள்கையை எங்கள் வன்னியிலும் உறுதிப்படுத்துவீர்களா?
மிகவும் கடைசி நிலையில் STEM கல்வியில் உள்ள எங்கள் மாவட்டத்தின் முல்லைத்தீவின் ஆசிரிய ஆளணித் தேவைக்குக்கு உங்கள் வரவுசெலவுத்திட்டம் முன்னிரிமை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பல பாடசாலைகள் போதுமான அளவில் கல்வி சார், கல்விசாரா ஊழியர்கள் இல்லை. முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மாத்திரம் 392 ஆளணி வெற்றிடங்கள். இவர்களில் 322 ஆசிரியர்கள். அதிபர் சேவைக்குரியோர் 23, காவலாளிகள் 20 பேர், பாடசாலைப்பணியாளர்கள் 12. விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழினுட்பம் உட்பட பத்து துறைகளுக்கு ஆசிரிய ஆலோசகர்கள் இல்லை. 14 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை. வவுனியா தெற்கு வலயத்தில் 29 காவலாளிகள், 10 பாடசாலை பணியாளர்கள் உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்கள் உள்ளன. ஏனைய கல்வி வலயங்களிலும் இத்தேவைப்பாடுகள் உண்டு. பட்டதாரிகளை உள்ளீர்ப்பு செய்யும் வகையில் பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தரத்தீர்வு என்ன? கௌரவ கல்வி அமைச்சர் அவர்களே! நீங்கள் சொல்லும் தரமான கல்வி, சமத்துவமான கல்விக்கான வாய்ப்புகளை எங்கள் பிள்ளைகள் பெறுவதையும் உறுதிப்படுத்துங்கள். இதுவரை நாங்கள் பெறவில்லை என்பவற்றுக்கான சான்றுகளே இவை!
தகவல் தொழினுட்ப நிலைமாற்றத்திலும் ஏனைய 7 மாகாணங்களை விடவும் வடக்கும் கிழக்கும் பின்தங்கியே உள்ளது. கௌரவ கல்வி அமைச்சரே! இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் போதுமானதற்ற தகவல் தொழினுட்ப மற்றும் தொலைக்கல்வி நிலையங்கள் இல்லாத மாகாணங்கள் வடக்கும் கிழக்கும் தான். கிழக்கிலே 4 கல்வி வலயங்களிலும் வடக்கிலே 3 கல்வி வலயங்களிலும் தகவல் தொழினுட்ப வள நிலையங்கள் இல்லை. இந்தப்பாகுபாடு ஏன்? பாராளுமன்ற உறுப்பினராக நான் சார்பாகும் வன்னிமாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கும் மன்னார் கல்வி வலயத்திற்கும் இதுவரை அவ் வளநிலையங்கள் ஏன் இன்னமும் வழங்கப்படவில்லை. இங்குள்ள ஆசிரியர்கள் போதுமான பயிற்சியை பெறும் வசதிகள் அற்று காணப்படுகின்றனர். இங்குள்ள பெரும்பகுதி கணினிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இலத்திரனியல் கருவிகளை பதிவழிப்பதில் உள்ள இறுக்கமான நடைமுறையால் பல பாடசாலைகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல கணினிகள் இலத்திரனியல் குப்பைகளாக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
2024 இன் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலே 57% மேசைக்கணினிகள் பழுதடைந்து காணப்படுவதை இனங்காண முடிந்தது. வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 75% மேசைக்கணினிகள் பழுதடைந்துள்ளன. திருத்தப்படாதுள்ள கணினிகள் கிடப்பில் போடப்படும் போது சிறுபிழைகள் பெரும்பிழைகளாகின்றன. காவலாளிகள் இன்றிய சூழலில் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பழுதான கணினிகளின் பாகங்கள் களவு போகின்றன. இலத்திரனியல் கருவிகளின் திருத்தம் மற்றும் பதிவழித்தலில் உள்ள இறுக்கமான நடைமுறைகளால் நாடுமுழுதும் உள்ள பாடசாலைகள் இடர்களை எதிர்நோக்குகின்றனர். ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட பலரின் ஆய்வுகளும் இதற்குச்சான்று. கௌரவ கல்வி அமைச்சரே! இலத்திரனியல் கணினிகளை முகாமை செய்வதில் பொருத்தமான சாத்தியப்பாடான நடைமுறைகளை கொள்கை அளவில் ஏற்படுத்துங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
தொழினுட்ப நிலைமாற்றத்துக்கு மேலாக, வன்னியில் உள்ள பல பாடசாலைகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல வன்னிப்பாடசாலைகளில் முறையான சுகாதார வசதிகள் இல்லை. இது மாணவிகளைப் பாதிக்கிறது. பல பாடசாலைகைளில் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் இல்லை. STEM கல்விக்குத் தேவையான செயன்முறை பயிற்சிகளை எங்கள் மாணவர்கள் பெற இயலாதுள்ளார்கள். வன்னிப்பிராந்திப் பாடசாலைகளில் நூலக வலுவூட்டலும் தேவை.
தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே சான்றாக்குவோம்.
தாங்கள் அறிந்தது தான். கல்விக்கான முதலீடு செலவல்ல. அது சிறந்ததோர் எதிர்காலத்துக்கான முதலீடு – என்றார்.