யாழ். மாநகர சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இருப்பினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல், தொடர்ச்சியாக அதே தவறுகளை இழைத்து பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கல்லூண்டாய் பகுதியில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தொடர்ச்சியாக தீ வைக்தப்படுகிறது. வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளுக்கு இதன்போது தீ வைப்பதால் அந்த புகையானது வீதி எங்கும் பரவுகின்றதுடன் குடிமனைகளுக்குள்ளும் செல்கின்றது.
இதனால் வீதியில் செல்பவர்களும், அண்மித்த பகுதிகளில் குடியிருப்பவர்களும் அந்த புகையை சுவாசிப்பதனால் சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், வீதியில் புகை பரவும்போது எதிரேயும், முன்னேயும் செல்கின்ற வாகனங்கள் கண்களுக்கு தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு உயிராபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
கடந்த ஒரு வருடத்திற்குள் இவ்வாறு ஒருதடவை கழிவுகளை எரியூட்டும்போது அந்த வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் வீதியில் சென்றவர்கள் அவருக்கு முதலுதவியளித்த சம்பவமும் இடம்பெற்றது.
உயிர்களுக்கு இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் யாழ். மாநகர சபையானது அதற்கான இழப்பீடுகளை வழங்குமா? சுகாதாரமான சூழலில் வசிக்க, சுகாதாரமான காற்றை சுவாசிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உள்ளது. இதற்கு யாழ். மாநகர சபையானது குந்தகம் விளைவிப்பது சட்டப்படி குற்றமாகும்.
அதுமட்டுமல்லாமல் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் உயிரிழந்து காணப்பட்டாலும் அவற்றை மாநகர சபையினர் விரைந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. மேலும், கழிவுப் பொருட்களை கழிவகற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது உரிய விதத்தில் எடுத்துச் செல்லாததால் கழிவுப் பொருட்கள் வீதியில் பரவுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
மக்களை பாதுகாக்க வேண்டிய மாநகர சபையே மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானதாக காணப்படுகிறது.
இவ்வாறான கழிவுப் பொருட்களை இயற்கை உரமாக மாற்றும் செயற்பாடுகளில் மானிப்பாய் பிரதேச சபையானது ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருக்கின்றபோது இவ்வாறானா கழிவுப் பொருட்களை தம்மிடம் வழங்குமாறும், தாங்கள் அதனை இயற்கை பசளையாக தயாரிப்பதாகவும் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தபோதும் மாநகர சபையானது அந்த கழிவுப் பொருட்களை வழங்க மறுத்துள்ளது.
இனப் படுகொலை தொடர்பான நினைவேந்தல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்கு நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்யும் பொலிஸாரோ, இது குறித்து செயற்படும் தன்னார்வ நிறுவனங்களோ இவ்வாறான பொதுப் பிரச்சினைகளுக்கு தங்கள் சார்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கு ஏன் முயற்சிப்பதில்லை?
இந்த பிரச்சினை இவ்வாறு தொடருமானால் விளைவுகள் வீபரீதமாக இருக்கும். எனவே வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன், மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் (செயல்பாடு) ஸ்.பி.தவகிருபா மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் திரு.ச.கிருஷ்ணேந்திரன் ஆகியோர் இந்த பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






