“கொழும்பு மாநகர சபை உட்பட சுமார் 100 சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொழும்பின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் வசமாகும் என்பதை ஸ்திரமாகக் கூறுகின்றேன். நான் குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் கொழும்பில் ஆட்சியமைப்பதற்கான பலத்தை வழங்குவேன்.
காரணம் கொழும்பு மாநகர சபை என்பது நாட்டினதும் கட்சியினதும் இதயம் போன்றதாகும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இடமாகும். அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கொழும்பில் ஆட்சியமைப்பதற்கு அரசும் பல திசைகளிலும் வலை வீசிக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாமும் எம் தரப்பில் சகல முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஓரிரு சுயேட்சைக் குழுக்கள் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ள போதிலும், பெரும்பாலானோர் எம்முடன் இணைந்துள்ளனர். ஆட்சியமைத்த பின்னர் ஆளும் தரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவர்களது தொகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதியை வழங்குவோம். அது இலஞ்சம் அல்ல.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளரை அந்தக் கட்சியினரே விரும்பவில்லை. எனவே, அரசால் தமது மேயரை நியமிக்கக் கூடிய சூழல் இல்லை. மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. எனவே, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளே ஆட்சியமைக்கும்.” – என்றார்.