நகர, பிரதேச மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இதுவரை பதவி உயர்வு பெறாமல் ஓய்வூதியத்திற்கு சென்று அநியாயமிழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
சங்கத்தின் கல்முனை தலைமைச் செயலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு குறிப்பிடுகையில்,
1990 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்ட இவர்கள் பல இன்னல்களை அனுபவித்து தனது தொழிலை மேற்கொண்டு வந்தார்கள். அரசாங்கத்தில் உள்வாங்கப்பட்டு, பின்பு மாகாண சபைக்குள் உள்வாங்கப்பட்டு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்ட பின்பும் கிழக்கு மாகாண சபைக்குள் மீண்டும் உள் வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இப்போதுள்ள புதிய ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளோம்.
கடந்த ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இந்த விடயமாக கோரிக்கைகள் முன் வைப்பதற்காக முயற்சி செய்து மூன்று மாதங்களின் பின்பு அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது 2023.11.28 ஆம் திகதி அம்பாறையில் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கதைத்தோம். அந்த உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், ஒரு வருட காலமாகியும் இன்னும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது மனவேதனை அளிக்கிறது.
பின்னர் 2024.08.31 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரின் ஆலோசகரின் அழைப்பின் பேரில் அங்கு சென்று இது சம்பந்தமாக தெளிவுபடுத்தினோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் பிரதம செயலாளரிடமும் இது விடயமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். முதலமைச்சின் செயலாளரிடம் கதைத்த போது அவர் பின்வருமாறு கூறினார்,
ஆளுநருடன் கோரிக்கைகள் தொடர்பாக வாய்மூல உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டதே தவிர எதுவிதமான எழுத்து மூல கோரிக்கைகளும் முன்வைக்கப்படாததால் எங்களுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது என்று கூறினார்.
தொழிலாளர் வர்க்கத்துக்குரிய ஆதரவுடன் வந்த புதிய அரசாங்கம் என்ற அடிப்படையில் புதிய அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் உட்பட அனைவரும் எமது இந்த பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதோடு, 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடாத்தி இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்க முன்வருமாறு புதிய அரசாங்கத்தை வேண்டி நிற்கின்றோம் என்றார்.